கும்பகோணத்தில், சேதமடைந்த பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணி தீவிரம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கும்பகோணத்தில், சேதமடைந்த பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு
கும்பகோணம்:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கும்பகோணத்தில், சேதமடைந்த பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாதாள சாக்கடை திட்டம்
கும்பகோணம் மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரின் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது.
சாலைகளில் தேங்கியிருந்த கழிவு நீர்
ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கும்பகோணம் நால் ரோடு அருகே உள்ள ஸ்ரீநகர் காலனி பகுதியில் பாதாள சாக்கடை ஆள்நுழை குழி சேதமடைந்து அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசியது. மேலும் ஆள்நுழை குழி அருகே சாலை சேதமடைந்து மிக பெரிய பள்ளம் காணப்பட்டது. இந்த சாலையில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.
சீரமைக்கும் பணி தீவிரம்
இதே போல் கும்பகோணம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது.மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் சேதமடைந்த பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பாதாள சாக்கடை உடைப்பை சீரமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து கும்பகோணம் சேய்குளம் பகுதியில் நால் ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலை, ஸ்ரீ நகர் பகுதியில், மாதுளம் பேட்டை, நாச்சியார்கோவில் வழிநடப்பு தெரு, எம்.சி.எஸ்.ஆர். தெரு உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.