கோவில்பட்டயில் சமுதாய வளைகாப்பு விழா
கோவில்பட்டயில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 150 கர்ப்பிணிகளுக்கு சீதனப் பொருட்களான பட்டு புடவை, வளையல், பூ, மஞ்சள்- குங்குமம் தேங்காய்- பழம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசா பேகம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக் ராஜா, முன்னாள் யூனியன் துணை தலைவர் சுப்புராஜ், நகரசபை கவுன்சிலர் சுரேஷ், முன்னாள் நகரசபை கவுன்சிலர் அருணாசலசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவரும், செயலாளருமான ஆர்.ஏ.அய்யனார் தலைமை தாங்கினார். ஆசிரியை விசாலாட்சி வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகரசபை தலைவர் கா.கருணாநிதி கலந்துகொண்டு 163 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
முன்னதாக, கோவில்பட்டி நகரசபை கூட்ட அரங்கில் சாதாரண கூட்டமும், தொடர்ந்து அவசர கூட்டமும் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், நகரசபை ஆணையாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். சாதாரண கூட்டத்தில் 42 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 14 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
நகரசபை துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், கவுன்சிலர்கள் சீனிவாசன், ஜோதிபாசு, சரோஜா, ஏஞ்சலா, ஜேஸ்பின் லூர்துமேரி, செண்பகமூர்த்தி, கவியரசன் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினா். 20-வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் தனது வார்டு பகத்சிங் தெரு, ஆசிரமம் தெரு பகுதிகளில் சேதமடைந்த ரோடுகளின் படத்தை காட்டி, அவற்றை புதுப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு நகரசபை தலைவர் பதிலளித்து பேசுகையில், அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.