கொட்டாம்பட்டியில் காளைகளின் ஜல்...ஜல்... ஓசைக்கு தயாராகும் சலங்கை, மணிகள்

தைப்பொங்கல், ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு காளைகளுக்கான சலங்கை, கழுத்து மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2022-12-28 20:41 GMT

கொட்டாம்பட்டி

தைப்பொங்கல், ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு காளைகளுக்கான சலங்கை, கழுத்து மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு விழா

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். அதிலும் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் காளைகளை அழைத்து செல்வதற்கு அதனை ஜோடித்து அழகு சேர்க்கும் விதமாக காளையின் கழுத்தில் சலங்கை மணி அணிவிப்பது, துண்டுகள் கட்டுவது, நெற்றியில் ஆபரணம் அணிவிப்பது, முன்னங்காலில் சலங்கை மணி கட்டுவது, உடலில் சந்தனம் குங்குமம் வைப்பது என அலங்கரிப்பதை தென்மாவட்ட பகுதிகளில் காணமுடியும்.

சலங்கை மணிகள்

அதிலும் குறிப்பாக மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் காளைகளுக்கு இந்த ஜோடிப்பு கட்டாயமாக இடம்பெறும். காளைகளுக்கு கழுத்தில் அணிவிக்கப்படும் மணி ஓசையானது, மாடுகளுக்கு புது உற்சாகத்தை கொடுக்கும். காளைக்கு சலங்கை மணி என்பது ஒரு அடையாளம். எனவே காளைக்கான சலங்கை மணி உற்பத்தியில் கொட்டாம்பட்டியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காளைகளுக்கு அழகு சேர்க்கும் இந்த சலங்கை மணியில் நிறைய ரகங்கள் உள்ளன. அதிலும் காரைக்குடி, அரியக்குடி சலங்கை மணிதான் மிகவும் சிறப்பு பெற்றது. அதிகபட்சமாக ரூ.15 முதல் 30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அரியக்குடி மணி, பித்தளை மணி, சில்வர்மணி, ஆக்கமணி, பாலமணி, வாழைக்காய்மணி என பல்வேறு ரகங்களாக இந்த சலங்கை மணிகள் உள்ளன. இவை ரூ.2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்கப்படுகின்றது.

விறுவிறுப்பு

மார்கழி மாதம் பிறந்ததிலிருந்து பொங்கல் பண்டிகையொட்டி மஞ்சுவிரட்டுகளுக்காக இந்த சலங்கை மணிகள் உற்பத்தி செய்யும் பணிகள் கொட்டாம்பட்டியில் விறுவிறுப்பு அடைந்துள்ளன.

இங்கிருந்து மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்யப்பட்டும் வருகின்றது. கால்நடைகளின் பதப்படுத்தப்பட்ட தோலை கொள்முதல் செய்து அதன்மூலம் இந்த சலங்கை மணிகள் தயாரிக்கப்படுகின்றது. அதனுடன் சலங்கை மணிகளை கோர்த்து உள்ளான் நூல் மூலம் செய்யப்படும் குஞ்சங்களை தைத்து நேர்த்தியாக வடிவமைக்கின்றனர்.

இங்கு சலங்கை மணிகள் மட்டுமல்லாது மாடுகளுக்கு தேவையான மூக்குகயிறுகள், காளைகளை கட்டுவதற்கான கயிறுகள் மற்றும் கால்சலங்கை மணிகள் உள்ளிட்டவையும் உற்பத்தி செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே சலங்கை மணி தயாரிக்கும் பணி நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்