கோத்தகிரி பகுதியில், குடிபோதையில் வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபராதம்
கோத்தகிரி பகுதியில், குடிபோதையில் வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டிய வாகன ஓட்டிகள் 10 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று கோத்தகிரி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய 7 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச்சென்ற 2 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து கோத்தகிரி மாஜிஸ்திரேட் வனிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் போலீசார் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் செல்லும் சாலைகளில் மேற்கொண்ட வாகன சோதனையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்கள், அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டியவர்கள் உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மொத்தம் சேர்த்து ரூ.27 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் ரோந்து பணி சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 51 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.34 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.