கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகின- சீசன் முன்கூட்டியே முடிவதால் விவசாயிகள் அதிர்ச்சி

கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகின. சீசன் முன்கூட்டியே முடிவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-12-11 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகின. சீசன் முன்கூட்டியே முடிவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தக்காளி சாகுபடி

கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சொக்கனூர், கல்லாபுரம், வடபுதூர் நெம்பர் 10 முத்தூர், கோவில்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், கோடங்கிபாளையம், அரசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி விவசாயத்தை நம்பி இருப்பதால் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தொடங்கும் தக்காளி சீசன் புரட்டாசி மாதத்தில் தக்காளி காய்ப்பு தொடங்கி தை மாதம் வரை நீடிக்கும். இந்த நேரங்களில் தமிழகத்தில் பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தக்காளி வரத்து குறைவாக இருக்கும். ஆனால் கிணத்துக்கடவு பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு மட்டும் கூடுதல் விலை கிடைக்கும். இந்த ஆண்டும் விவசாயிகள் வழக்கம் போல கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 243.32 ஹெக்டர் பரப்பளவில் தக்காளி விவசாயத்தை மேற்கொண்டு வந்தனர். ஆரம்ப கட்டத்தில் தக்காளிக்கு ஏற்ற சீசன் நிலவி வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக காணப்பட்டது.

விலை வீழ்ச்சி

இதனால் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.250 வரை விற்பனையானது. அதன் பின்னர் தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்து 50 ரூபாய் வரை ஏலம் போனது. தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சில விவசாயிகள் தங்களுக்கு தக்காளி விவசாயம் மேற்கொள்ள செலவழித்த பணத்தை கூட எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் கிணத்துக்கடவு பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தைமாசம் வரை இருக்கக்கூடிய தக்காளி சீசன் அண்மையில் பெய்த ெதாடர் மழையால் தக்காளி செடிகள் அழுகின. சீசன் முன்கூட்டியே முடியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்