கீழையூரில், கேழ்வரகு அறுவடை பணி
சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் கீழையூரில் கேழ்வரகு அறுவடை பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் கீழையூரில் கேழ்வரகு அறுவடை பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
சிறுதானிய சாகுபடி
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்துகொண்டு, சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் கிராமத்துமேடு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கேழ்வரகு அறுவடை பணியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாகை மாவட்டம் பாரம்பரியமான நெற்களஞ்சியமாக விளங்குவதால் இங்குள்ள விவசாயிகள் அதிக அளவில் நெல் மட்டுமே சாகுபடி செய்து வந்தனர்.வேளாண்மை துறையின் மூலம் குறுவையில் மாற்றுப்பயிராக சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 320 விதைகளுக்கும், ரூ.180 மண்ணில் இடும் நுண்ணுயிரிக்கும், ரூ.120 உயிர் உரங்களுக்கும், ரூ.500 விதைப்பு மற்றும் அறுவடை ஊக்கத்தொகை என மொத்தம் ரூ.1120 வழங்கப்பட்டது.
ஏக்கருக்கு ரூ.1150
இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 15 ஏக்கர் பரப்பில் கேழ்வரகு பயிர் சாகுபடி செய்யப்பட்டது. 2023-24 -ம் ஆண்டு சிறுதானியங்கள் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்திட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண்மை துறை மூலம் கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டு குறுவையில் மாற்றுப்பயிராக சிறுதானியம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1150 வீதம் 7 ஏக்கர் இலக்கு பெறப்பட்டுள்ளது. இதில் ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கர் மட்டுமே வழங்கப்படும். நாகை மாவட்டம், கீழையூர் வட்டாரம், சின்னதும்பூர் பஞ்சாயத்தில் உள்ள கிராமத்துமேடு கிராமத்தில் ஒருவர் ஒரு ஏக்கரில் கேழ்வரகும், 1 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகமான 60-ம் குறுவையும், காய்கறி மற்றும் பழபயிர்கள் போன்வற்றை இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து சாகுபடி செய்து வருகிறார். இதில் கேழ்வரகு பயிர் தற்போது அறுவடை நிலையில் உள்ளது.
ஊக்கப்படுத்தும் நடவடிக்கை
இங்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்து என்பதாலும், சிறுதானிய ஆண்டு என்பதாலும் மற்ற விவசாயிகளை சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதை தொடர்ந்து உழவர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பண்ணைக்கருவிகளையும், 2 பயனாளிகளுக்கு தார்ப்பாயினையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, கீழையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.