காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பாளரை உள்ளே வைத்து நிலத்துக்கு 'சீல்' வைத்த அதிகாரிகளால் பரபரப்பு

காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பாளரை உள்ளே வைத்து ஆக்கிரமிப்பு நிலத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-14 09:20 GMT

ரூ.60 லட்சம் பாக்கி

காஞ்சீபுரம் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ளது நகரீஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள் அருகில் பல ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவில் 15 ஆயிரம் சதுர அடி உள்ள நிலத்தை நீண்ட காலமாக ஆறுமுகம் என்பவர் குத்தகைக்கு எடுத்து அனுபவித்து வந்தார். இந்த நிலையில், அவர் இறந்த பிறகு அந்த இடத்தை அவரது மகன் சுந்தர்(வயது 45) கடந்த 12 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் தற்போது கோவில் அறங்காவலர் குழு பொறுப்பேற்ற நிலையில், நீண்ட கால பாக்கியாக ரூ.60 லட்சம் வைத்துள்ள இந்த நபரிடமிருந்து நிலத்தை மீட்க முடிவு செய்தனர்.

சீல் வைத்தனர்

கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கோவில் ஊழியர்களுடன் சென்று அந்த இடத்தை பூட்டு போட்டு சீல் வைத்தார். இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு பிறகு பூட்டிய வளாகத்தில் இருந்து ஒருவரது குரல் வருவதாக அந்த பகுதியில் இருந்து தகவல் வந்தது. அதன் அடிப்படையில் விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு இருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சுந்தர் என்பது தெரிய வந்தது. கோவில் செயல் அலுவலருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அறங்காவலர் குழு மற்றும் செயல் அலுவலர் முன்னிலையில் மீண்டும் சீல் அகற்றப்பட்டு உள்ளே இருந்த நபரின் 2 மோட்டார் சைக்கிள்கள் வெளியே எடுக்கப்பட்டு, அந்த நபரையும் வளாகத்தில் இருந்து வெளியேற்றி மீண்டும் சீல் வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்