கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கல்யாணம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-06 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.

பங்குனி திருவிழா

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது.

காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாணம்

இரவு 7 மணியளவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இவ்விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கழுகுமலை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்