கடமலைக்குண்டுவில்குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு:பொதுமக்கள் அவதி
கடமலைக்குண்டுவில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடமலைக்குண்டு கிராமத்தில் சங்கம்பட்டி தெருப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. இதனால் குழாயில் சில இடங்களில் அடைப்பு ஏற்படுகிறது. சில இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகளில் குடிநீர் தேவை 2 மடங்காகி உள்ளது. ஆனால் குழாய்கள் சேதம் மற்றும் மின்மோட்டார் பயன்பாடு காரணமாக போதிய அளவில் குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே குழாய்களை சீரமைத்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.