கடமலைக்குண்டு பகுதியில்கொட்டை முந்திரி விலை அதிகரிப்பு
கடமலைக்குண்டு பகுதியில் கொட்டை முந்திரி விலை அதிகரித்துள்ளது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொட்டை முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த சாரல் மழையின் காரணமாக மரங்களில் பூ, பிஞ்சுகளின் உற்பத்தி அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2 மாதமாக மழை பெய்யாத காரணத்தால் தற்போது கொட்டை முந்திரியின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.60 வரை மட்டுமே விற்பனையான கொட்டை முந்திரி தற்போது ரூ.90 வரை விற்பனையாகிறது. இதனால் கொட்டை முந்திரியை பறிக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சீசன் தொடங்கிய முதல் வாரத்திலேயே கொட்டை முந்திரி ரூ.90 வரை விற்பனை ஆகிறது. மேலும் இந்த ஆண்டு உற்பத்தி அதிக அளவில் உள்ளதால் விலை இதே நிலை நீடித்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டு விலை குறைவால் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை ஈடு செய்யும் வகையில் கொட்டை முந்திரியின் விலை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொட்டை முந்திரியை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.