பாரம்பரியத்தை போற்றும் விதமாக 4 ஏர்பூட்டி நிலத்தில் உழுத விவசாயிகள்

திருப்பரங்குன்றத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பாரம்பரியத்தை போற்றும் விதமாக 4 கலப்பையில் 8 மாடுகள் பூட்டி நிலத்தில் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2023-04-14 20:59 GMT

திருப்பரங்குன்றம் 

திருப்பரங்குன்றத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பாரம்பரியத்தை போற்றும் விதமாக 4 கலப்பையில் 8 மாடுகள் பூட்டி நிலத்தில் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

ஏர் பூட்டி உழுத விவசாயிகள்

விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது நிலத்தில் கலப்பையில் மாடுகள் பூட்டி நிலத்தை ஆழமாக உழுது விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தற்போது நவீன எந்திரங்களைக் கொண்டு நிலத்தில் உழுது விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் பாரம்பரியமிக்க கலப்பை, மற்றும்தார்குச்சி காண்பது அரிதாக மாறிவருகிறது. இதே சமீபம் திருப்பரங்குன்றம் விவசாயிகள் பாரம்பரிய பழக்கவழக்கத்தை இன்றும் தொன்றுதொட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் விவசாய பணி தொடக்கமாக திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோவில் நிலத்தில் 4ஏர் கலப்பையில் 8 எருதுகள் (மாடுகள்) பூட்டி நிலத்தை உழுவார்கள். இதையொட்டி மாடுகளின் கொம்புகளில் பூமாலை சூடியும், நெற்றியில் குங்குமம் வைத்து அலங்கரித்தனர். மேலும் கலப்பைகளுக்கு சந்தனம், குங்குமம் வைத்து நிலத்தில் பத்தி, சூடம் ஏற்றிசாமி கும்பிட்டனர் இதில் ஏராளமான விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர், முன்னதாகவிவசாயிகள் ஒவ்வொருவரும் பூச்சூடிய புதிய தார்க்குச்சியை கையில் பிடித்தபடி. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு கிரிவலம் வந்தனர்.

வழிபட்டனர்

இந்த நிலையில் மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குகை கோவில் அருகே விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர்அங்கு நடப்பு ஆண்டிற்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சலவைத் தொழிலாளி முடிதிருத்தும் தொழிலாளி, மடை திறக்கும் தொழிலாளி, தச்சு தொழிலாளி மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள். உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் கூலி நிர்ணயம் தொடர்பாக பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய் செவ்வந்திகுளம், குறுக்கிட்டான் குளம், ஆரியன்குளம், பானாங்குளம், நெடுங்குளம் ஆகிய ஏழு கண்மாய்களின் விவசாயிகள் தேங்காய் பழம் மற்றும் பூமாலை தட்டுகளுடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று மழை பெய்ய வேண்டும் விவசாயம் செழிக்க வேண்டும் என்று வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்