கூடலூரில்பள்ளி வளாகத்தில் புகுந்த மிளா மான்
கூடலூரில் பள்ளி வளாகத்தில் மிளா மான் புகுந்தது.
கூடலூரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளி வளாகத்துக்குள் நேற்று மிளா மான் ஒன்று புகுந்தது. இதற்கிடையே காலையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்களை கண்டதும் மிளா மான் அங்கும், இங்கும் துள்ளி குதித்து ஓடியது. இதையடுத்து மாணவர்கள் விரட்டி சென்று மிளா மானை பிடித்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கம்பம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கம்பம் மேற்கு வனச்சரகர் (பொறுப்பு) சம்பத் மற்றும் வன காப்பாளர்கள் பாலாஜி, டேனியல் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் மிளா மானை கைப்பற்றி பெருமாள் கோவில் புலம் பகுதியில் உள்ள மேற்கு வனப்பகுதிக்குள் விட்டனர். வனப்பகுதியில் வெயில் சுட்டெரித்து வருவதால் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் குடிநீர் தேடி மிளா மான் வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறினர்.