அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் வட்டார மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று வட்டார மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று வட்டார மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மகாசபை கூட்டம்
பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் பொள்ளாச்சி தெற்கு வட்டார மகாசபை கூட்டம் சூளேஸ்வரன்பட்டியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்ட உதவி மேலாளர் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டாக்டர்கள், செவிலியல்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
மேலும் கூட்டத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் நிலவேம்பு கசாயம், கபசுரநீர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தெற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வாகன வசதி
வட்டார அளவில் மகாசபை கூட்டம் நடத்தி அந்தந்த வட்டாரங்களில் உள்ள கோரிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள கூட்டம் நடத்தப்படுகிறது. தெற்கு வட்டாரத்தில் நடந்த கூட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டிட வசதி செய்து கொடுக்க வேண்டும். கூடுலாக டாக்டர்கள், செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும். மேலும் சிகிச்சை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு தடுப்பூசி கொண்டு செல்ல வாகன வசதி இல்லாததால் பஸ்சில் கொண்டு செல்கின்றனர். இதனால் குறித்த நேரத்திற்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வர முடியவில்லை. எனவே வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதி, மின்விசிறி வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட அளவில் பரிசீலனை செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.