கோபியில் அரசு பஸ்களை பயணிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு
கோபியில் அரசு பஸ்களை பயணிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு உண்டானது.
கோபி பஸ் நிலையத்தில் பயணிகள் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த அரசு பஸ்களை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பயணிகள் கூறும்போது, 'கோபி பஸ் நிலையத்தில் இருந்து டி.என்.பாளையம், பங்களாப்புதூர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் அரசு டவுன் பஸ்கள் ஒரு வாரமாக இரவு நேரங்களில் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை. இரவு 7 மணிக்கு செல்லும் அரசு டவுன்பஸ் வருவதில்லை. அதனால் 8.30 மணிக்கு செல்லும் டவுன் பஸ்சில் 100 முதல் 150 பயணிகள் செல்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சரியான நேரங்களில் பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'. என்றனர். அதற்கு போலீசார் கூறும்போது, 'சரியான நேரங்களில் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பயணிகள் பஸ்களை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் கோபி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.