வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கில் தொங்கி தற்கொலை தாயும் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலை கிடைக்காத விரக்தி
திருவண்ணாமலை புறவழிச்சாலை மணலூர்பேட்டை சாலை கீழ் அணைக்கரையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் முரளிதரன் மனைவி ஜோதி (வயது 50) என்பவர் மகன் விஜய் என்ற மனோஜுடன் (28) வசித்து வந்தார். ஜோதியின் கணவர் முரளிதரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
கணவர் இறந்ததால் ஜோதி கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மனோஜ் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் ஜோதி பல முறை கண்டித்து உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு ஊதாரித்தனமாக சுற்றி வந்த மகன் மனோஜை அவரது தாய் ஜோதி ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்து விட்டு ஊர் சுற்றி வருகிறாய் என கேட்டள்ளார். அப்போது மனோஜ் தாயாருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாலிபர் தற்கொலை
வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்த நிலையில் தாய் திட்டியாதல் மனவேதனை அடைந்த மனோஜ் வீட்டில் யாரும் இல்லாத போது ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த ஜோதி மகன் இருந்த அறையின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்தபோது மின் விசிறியில் மகன் தூக்கில் தொங்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதனால் வேதனை அடைந்த அவர் அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் 3-வது மாடியில் உள்ள தனது தம்பி சம்பத் என்பவர் வீட்டிற்கு சென்று அங்குள்ள அந்த வீட்டின் ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய்- மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று காலையில் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகனின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மற்றும் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
=========