திருக்கார்த்திகையைமுன்னிட்டு அகல்விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு
தூத்துக்குடியில் திருக்கார்த்திகையைமுன்னிட்டு அகல்விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தூத்துக்குடியில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு அகல்விளக்குகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் புதிய வடிவ விளக்குகளை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
திருக்கார்த்திகை
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இரவில், வீடுகள்தோறும் அகல் விளக்கு தீபம் ஏற்றுவதும், கொழுக்கட்டை தயார் செய்து படைத்து வழிபடுவதும் வழக்கம் ஆகும். இந்த ஆண்டுக்கான திருக் கார்த்திகை விழா வருகிற 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீபத்துக்கான அகல்விளக்குகளை மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். தூத்துக்குடியில் விதவிதமான வடிவத்தில் அகல் விளக்குகள், விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ஒரு ரூபாய் முதல் ரூ.1500 வரை விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் தண்ணீரில் மிதக்கும் விளக்குகளும் விற்பனைக்கு வந்து உள்ளன. இந்த விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக புதிய வடிவத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விளக்குகளை ஏராளமானோர் போட்டி போட்டி வாங்கி வருகின்றனர்.
108 வகை விளக்குகள்
இது குறித்து அகல்விளக்கு விற்பனையாளர் ஒருவர் கூறும் போது, திருக்கார்த்திகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தயார் செய்யப்பட்ட அகல்விளக்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. களிமண், சிமெண்ட், பீங்கான் உள்ளிட்டவைகளால் பல வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. குபேர விளக்கு, சிம்னிவிளக்கு, பூந்தொட்டி விளக்கு, அஷ்டலட்சுமி விளக்கு, பாவை விளக்கு, மாப்பிள்ளை-பொன்னு விளக்கு உள்பட 108 வகையான பெயர்களில் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. தண்ணீரில் மிதக்கும் வகையிலான விளக்கு புதிய வரவாக உள்ளது. இதே போன்று அணையா விளக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இந்த விளக்குகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்று கூறினார்.