சி.முட்லூரில் மேம்பாலம் எங்கே அமைக்கலாம்? கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு

சி.முட்லூரில் கல்லூரி முன்பா? அல்லது கிராமத்தின் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்கலாமா? என்பது குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-08-18 18:45 GMT

புவனகிரி, 

விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கும், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் இடையில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருந்தது. இந்த இடத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இது பற்றி அறிந்ததும் சி.முட்லூர் கிராம மக்கள் நேரில் வந்து கலெக்டரிடம் பேசினர். அப்போது கிராம மக்கள், இந்த இடத்தில் மேம்பாலம் அமைத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. சி.முட்லூர் மையப்பகுதியில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.

இதனை ஏற்ற கலெக்டர் அருண்தம்புராஜ், கிராம மக்கள் கூறிய இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆய்வின்போது சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதாசுமன், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சக்திவேல், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, புவனகிரி ஒன்றியக்குழு துணை தலைவர் வாசுதேவன், ஊராட்சி மன்ற தலைவர் சுடர்விழி அன்பரசன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் அரவிந்தன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்