பங்குனி உத்திரத்தை முன்னிட்டுகுலதெய்வம் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குலதெய்வம் கோவில்களில் பக்தர்கள் குவிந்து வழிபாடு நடத்தினர்.

Update: 2023-04-04 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு குலதெய்வம் கோவில்களில் மக்கள் வழிபாடு செய்தனர்.

பங்குனி உத்திரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரம் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் குலதெய்வம் வழிபாடு செய்வதால் நம் முன்னோரின் ஆசியும், அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் நாளில் மக்கள் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து சாஸ்தா கோவில்களிலும் கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்து மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வந்தன. நேற்று மதியம் முதல் பங்குனி உத்திரம் தொடங்கியதால் ஏராளமான மக்கள் குலதெய்வம் கோவில்களில் நேற்று காலை முதலே குவியத் தொடங்கினர்.

வழிபாடு

மக்கள் தங்கள் குலதெய்வம் கோவில்களுக்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்தனர். மக்கள் வெளியூர்களில் இருந்தும் வந்து பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலி கொடுத்தும் வழிபாடு செய்தனர். இதனால் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டன. மக்கள் அதிக அளவில் கோவில்களுக்கு சென்றதால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. வெளியூர்களில் இருந்து கார், வேன்களிலும் மக்கள் வந்ததால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையும் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் வாகனங்கள் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்