ஈரோட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள் விழுந்து வடமாநில வாலிபர் சாவு
வடமாநில வாலிபர் சாவு
ஈரோட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள் விழுந்து வடமாநில வாலிபர் இறந்தார்.
வடமாநில வாலிபர்
ஈரோடு வீரப்பன் சத்திரம் ஆயில் மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 61). இவருக்கு ஈரோடு சூளை நெசவாளர் காலனி கந்தையன் தோட்டத்தில் பிராசிங் மில் உள்ளது. இந்த மில் வளாகத்தில் உள்ள அறையில் பீகார் மாநிலம் முசாப்பூரை சேர்ந்த மோனாசிங் ஹவுரா மகன் நீராஜ்குமார் (25), அதே மாநிலம் முத்துயாரி மாவட்டத்தை சேர்ந்த லலால்சிங் மகன் கரண் (25) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நீராஜ்குமாரும், கரணும் மது குடித்து விட்டு அறையில் தூங்கியுள்ளனர்.
நீராஜ்குமார் மீண்டும் மது குடிக்க வெளியே சென்றவர் மீண்டும் அறைக்கு வரவில்லை. நேற்று காலை கரண் எழுந்து பார்த்தபோது நீராஜ்குமாரை காணவில்லை. இதைத்தொடர்ந்து மில் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு கரண் மட்டும் வேலை பார்த்துள்ளார்.
தொட்டிக்குள் விழுந்து சாவு
இந்தநிலையில், மில்லின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி ஆழமுள்ள திறந்த வெளி கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியினை நேற்று மாலை 5.30 மணியளவில் சுத்திகரிப்புக்காக இயக்கியுள்ளனர். அப்போது தொட்டிக்குள் வாலிபர் ஒருவரின் உடல் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது இறந்தது அதே மில்லில் வேலை பார்த்த நீராஜ்குமார் என்பதும், மதுபோதையில் மில்லின் திறந்த வெளி கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் அருகே நின்றபோது தவறி விழுந்து இறந்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் நீராஜ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.