ஈரோடு மாவட்டத்தில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

Update: 2023-06-03 20:21 GMT

ஈரோடு மாவட்டத்தில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

பட்டா வழங்க உத்தரவு

ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதியில் நத்தம், நகர நில அளவை கிராம ஆவணங்களில் 'ரயத்து நிறுத்தப்பட்டது' என பதிவு செய்யப்பட்ட ரயத்து மனை, ரயத்து நஞ்சை, ரயத்து புஞ்சை நிலங்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா பெற்றுக்கொள்ளலாம்.

முகாம்

கோபிசெட்டிபாளையம் அருகே கலிங்கியம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் சத்தியமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலும், வாணிப்புத்தூர் அருகே கொண்டையம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் கோபி கோட்ட கலால் அதிகாரி எஸ்.ஆசியா தலைமையிலும், சவுண்டப்பூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் கோபி தனி தாசில்தார் அஷ்ரப்புன்னிஷா தலைமையிலும், அந்தியூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தனி தாசில்தார் எஸ்.கார்த்திக் தலைமையிலும், மாத்தூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் தனி தாசில்தார் சந்திரசேகர் தலைமையிலும் வருகிற 6-ந் தேதியும், 7-ந் தேதியும் முகாம் நடக்கிறது.

எலத்தூர்

இதேபோல் நம்பியூர் அருகே எம்மாம்பூண்டி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைசாமி தலைமையிலும், எலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் எம்.சண்முகசுந்தரம் தலைமையிலும் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறிஉள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்