ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2½ லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்; வேளாண்மை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2½ லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-07 21:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2½ லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரக்கன்றுகள் நடுவது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்க திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஈரோடு அருகே எலவமலை கரைஎல்லப்பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகிக்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நோக்கம்

தமிழகத்தில் மரம் சார்ந்த விவசாயம் மூலமாக சுற்றுப்புற சூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர் சாகுபடியுடன் மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக இலவசமாக மரக்கன்றுகள் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பயிர் சாகுபடியுடன் மரம் வளர்ப்பது, பசுமை பரப்பை அதிகரிப்பது, மண்ணின் அங்கக பொருட்களை அதிகரித்து மண் வளத்தை மேம்படுத்துவது, கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்கள் கிடைப்பதை உறுதி செய்வது, வெப்பமயமாக்கலை குறைப்பது, கூடுதல் வருவாயை உருவாக்குவது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

உழவன் செயலி

இந்த திட்டத்தில் வரப்பு ஓரங்களில் நடவு செய்ய ஒரு  ெஹக்டேருக்கு160 மரக்கன்றுகள், குறைந்த அடர்வு முறை நடவு செய்ய ஒரு  ெஹக்டேருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் ஒரு விவசாயிக்கு 2 ெஹக்டேருக்கு அதிகபட்சமாக 1,000 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

செம்மரம், வேங்கை, ரோஸ்வுட், மகோகனி, பெருநெல்லி, நாவல், இலுப்பை, புளியன் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம்.

முதல்கட்டமாக, 1 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் வினியோகிக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக மீதமுள்ள மரக்கன்றுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வேளாண் துணை இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி, உதவி இயக்குனர் சாமுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்