ஈரோடு மாவட்டத்தில்7½ லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுரேஷன் கடைகளில் வினியோகிக்க டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

டோக்கன் வழங்கும் பணி

Update: 2023-01-03 20:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் 7½ லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளன. இதற்காக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000-த்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்றும், அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு உள்ள தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்திலும் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று காலை வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கனை வழங்கினார்கள்.

7½ லட்சம் குடும்பங்கள்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வழங்கல் அதிகாரி இலாகிஜான் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,183 ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட உள்ளது. மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் பொங்கல் பரிசு பெற தகுதிபெற்ற அரிசி ரேஷன் கார்டுதாரர்களான 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 குடும்பங்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.

தமிழக முதல்-அமைச்சர் வருகிற 9-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணியை சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு ரேஷன் கடைகளில் 200 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்