ஈரோடு மாவட்டத்தில் 4,074 குடும்பத்தினருக்கு காப்பீட்டு அட்டை; அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 74 பேருக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

Update: 2022-10-03 20:14 GMT

ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 74 பேருக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

காப்பீட்டு திட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி., திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல் -அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

மருத்துவ சேவை

ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் 7 அரசு ஆஸ்பத்திரிகள், 50 தனியார் ஆஸ்பத்திரிகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 ஆயிரத்து 189 பேருக்கு ரூ.26 கோடியே 96 லட்சத்து 66 ஆயிரத்து 985 சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 74 குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஓவியப்போட்டி

ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்ற ஆண்டு வருமான சான்று (ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு குறைவாக) ஆகிய ஆவணங்களுடன் ஈரோடு தாசில்தார் அலுவலக வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி இணையதளத்தில் பதிவுசெய்து மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

இதைத்தொடர்ந்து காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளை சேர்ந்த 3 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்களுக்கு சான்றிதழ்களும், 5 பேருக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும் மற்றும் பள்ளிக்கூட மாணவ, மாணவிர்களுக்கு இடையே நடைபெற்ற ஓவியபோட்டியில் வெற்றிபெற்ற 3 மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மணி, இணை இயக்குனர் பிரேமகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்