ஈரோடு மாவட்டத்தில்குற்றச்செயல்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது;போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் குற்றச்செயல்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-31 23:46 GMT

ஈரோடு மாவட்டத்தில் குற்றச்செயல்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.

40 கொலை வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் மாவட்ட போலீஸ் துறையானது சிறப்பாக பணியாற்றி உள்ளது. குறிப்பாக குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீஸ் நிலையங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் கடந்த 2021-ம் ஆண்டு 40 கொலை வழக்குகள் பதிவான நிலையில் இந்த ஆண்டு 21 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாகவும், இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 50 சதவீதம் குறைவாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

மாவட்ட போலீஸ் துறையின் செயல்பாடானது முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு பதிவான அனைத்து கொலை வழக்குகளும் 100 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு 38 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு 377 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 101 வாகனங்கள் மற்றும் 228 சவரன் நகைகள் உட்பட ரூ.2 கோடியே 24 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள களவு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.

கஞ்சா - புகையிலை

அதாவது 76 சதவீதம் களவு சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 ஆயிரத்து 142 பேர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் லாட்டரி வழக்குகளில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் 244 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 396 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.23 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 163 கிலோ கஞ்சா, 3 ஆயிரத்து 8 போதை மாத்திரைகள் மற்றும் 196 போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 79 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் முந்தைய ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகப்படியான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 419 வழக்குகள் பதியப்பட்டு 465 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 ஆயிரத்து 107 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 17 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்