ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

Update: 2022-11-07 00:13 GMT

ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

டெங்கு தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலங்களிலும் வார்டு வாரியாக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று பார்க்கின்றனர். அவ்வாறு தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வலியுறுத்துகின்றனர்.

கொசு மருந்து...

மேலும் வீட்டு அருகே தண்ணீர் தேங்காத வண்ணம் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பழைய டயர், ஆட்டு உரல் போன்றவற்றில் தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் எனவும், தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களில் கொசுக்கள் செல்ல முடியாதபடி மூடி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையை ஏற்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் 4 மண்டலத்திலும் வார்டு வாரியாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த பணிகளில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்