ஈரோடு மாநகராட்சியில்வளர்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை என்று கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு;அ.தி.மு.க. வெளிநடப்பு

ஈரோடு மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-04-28 21:42 GMT

ஈரோடு மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

மாநகராட்சி கூட்டம்

ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

துணை மேயர் வி.செல்வராஜ், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள்.

அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சியில் தேர்தல் நடந்தபோது, கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாங்கள் பொதுமக்களின் குறைகளை சரி செய்வோம். கோரிக்கைகளுக்கு தீர்வு காணுவோம் என்று வாக்குறுதி அளித்து ஓட்டுகள் பெற்றோம். கவுன்சிலர்கள் ஆகி ஒரு ஆண்டு முடிந்து விட்டது. ஆனால், இதுவரை பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கிறோம்.

சாக்கடை அள்ளுவது, குப்பை சேகரிப்பது, குடிநீர் வினியோகம் தவிர வேறு ஏதேனும் வளர்ச்சிப்பணிகள் நடக்கிறதா என்றால் எதுவும் இல்லை. அப்படியே நடைபெறும் சில பணிகள் கூட அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமல் அதிகாரிகள் செய்கிறார்கள். ஒரு வார்டில் கவுன்சிலர் மக்களின் கருத்துகளை கேட்டு, அவர்களுக்கு எது அத்தியாவசியம் என்று தெரிந்து அதை கோரிக்கையாக வைக்கிறார். அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு என்ன தேவையோ அந்த பணியை செய்கிறார்கள். மேலும், வார்டுகளில் திட்டப்பணிகள், ஆய்வுப்பணிகள் நடைபெறுகிறபோது கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. மக்கள் ஒவ்வொரு முறையும் எங்களிடம்தான் கோரிக்கைகள் வைக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற முடியாமல், மக்களை சந்திக்கவே கஷ்டமாக உள்ளது.

குப்பை மேலாண்மை

மாநகராட்சியில் ஆங்காங்கே குப்பை மேலாண்மை திட்ட கிடங்குகள் உள்ளன. அதில் 33-வது வார்டு நேதாஜி நகரில் அமைக்கப்பட்டு உள்ள கிடங்கு, குடியிருப்புகள் மிகுந்த இடத்தில் உள்ளது. இங்கு ஈ தொல்லை அதிகமாக இருக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள குப்பை மேலாண்மை கிடங்குகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைப்பணி, தண்ணீர் திறக்கும்பணி, டிரைவர் பணியில் இருக்கும் சுயஉதவிக்குழுவினருக்கு ஒதுக்கீடு செய்யும் ஊதியத்தொகையை பிடித்தம் இன்றி வழங்க வேண்டும். தெருவிளக்குகள் விரைவில் அனைத்து இடங்களிலும் பொருத்த வேண்டும்.

பாதாளசாக்கடை திட்ட உடைப்புகள் சரி செய்யப்பட வேண்டும். ஆங்காங்கே குழாய் அடைப்பால் கழிவுகள் வெளியேறி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, தொடர் தூய்மைப்பணி செய்யப்பட வேண்டும். சாக்கடை கால்வாய்களில் தூர் வாரும் போது உடனடியாக கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினார்கள்.

அ.தி.மு.க. வெளிநடப்பு

கூட்டத்தில், அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசும்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தலின் போது சாலைகள் போடப்பட்டன. ஆனால் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வார்டுகளில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று அறிவித்தார். அவருடன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.க. கவுன்சிலர் ஆதிஸ்ரீதர் பேசும்போது, ஈரோடு பஸ் நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தேன். அது தரமாக இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், மேயர், துணைமேயர் ஆகியோர் வார்டு வார்டாக மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

நிரூபிக்க வேண்டும்

அப்போது 4-ம் மண்டல தலைவர் குறிஞ்சி தண்டபாணி பேசும்போது, மாநகராட்சி சார்பில் நடைபெறும் பஸ் நிலைய பணிகள் குறித்து கவுன்சிலர் குற்றம்சாட்டி இருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவரது குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா இல்லையா என்று அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அவரது குற்றச்சாட்டு ஆளும் கட்சியின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக மாறிவிடும். எனவே கட்டுமான பணிகள் குறித்து கண்டிப்பாக அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

மண்டல தலைவர்கள் பி.கே.பழனிச்சாமி, காட்டு சுப்பு என்கிற சுப்பிரமணியன், சசிக்குமார் ஆகியோரும், கவுன்சிலர்கள் கோகிலவாணி மணிராசு, அ.செல்லப்பொன்னி, மங்கையர்க்கரசி, கவுசல்யா, ஈ.பி.ரவி, ரேவதி திருநாவுக்கரசு, ஜெயமணி, நந்தகோபு ஆகியோர் பேசினார்கள். கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர் விஜயா மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்