ஈரோடு மாநகராட்சியில்ரூ.5 கோடி செலவில் 20 சுகாதார நலவாழ்வு மையம்;விரைவில் திறக்க நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சியில் 20 சுகாதார நலவாழ்வு மையம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-04-12 21:34 GMT

ஈரோடு மாநகராட்சியில் 20 சுகாதார நலவாழ்வு மையம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகாதார நலவாழ்வு மையம்

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க மாநகராட்சியில் ஈரோடு காந்திஜி ரோடு, பி.பி.அக்ரஹாரம், நேதாஜி சாலை, கருங்கல்பாளையம், சூரம்பட்டி, அகத்தியர் வீதி, வீரப்பன் சத்திரம் (சாணார்பாளையம்), பெரியசேமூர், சூரியம்பாளையம், ராஜாஜிபுரம் ஆகிய 10 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க, ஏற்கனவே உள்ள 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 20 சுகாதார நலவாழ்வு மையங்களை அமைத்திட அரசு உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசு ஒவ்வொரு சுகாதார நலவாழ்வு மையத்திற்கும் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது.

பணி நிறைவு

அதன்பேரில், ஈரோடு மாநகராட்சி 36-வது வார்டுக்கு உட்பட்ட காவேரி ரோடு, 42-வது வார்டுக்கு உட்பட்ட மரப்பாலம், 14-வது வார்டில் வைராபாளையம், 15-வது வார்டில் அன்னை சத்யா நகர், 55-வது வார்டில் தணிகை நகர், 51-வது வார்டில் அண்ணா நகர், 40-வது வார்டில் காவேரி ரோடு, 39-வது வார்டில் பெரியமாரியம்மன் கோவில் வீதி, 15-வது வார்டில் வி.ஜி.பி. நகர், 59 -வது வார்டில் கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதி, 57-வது வார்டில் பாரதி நகர், 9-வது வார்டில் குறிஞ்சி நகர், 11-வது வார்டில் மாணிக்கம்பாளையம், 23-வது வார்டில் சத்யா நகர், 47-வது வார்டில் திரு.வி.க. வீதி, 50-வது வார்டில் முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி-2, 6-வது வார்டில் ஞானபுரம், 3-வது வார்டில் இந்திராபுரம், 5-வது வார்டில் எல்லப்பாளையம், 28-வது வார்டில் முனிசிபல் காலனி ஆகிய 20 இடங்களில் சுகாதார நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.

தற்போது, சுகாதார நலவாழ்வு மையங்கள் கட்டுமான பணி நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த சுகாதார நல வாழ்வு மையங்களில் ஒரு டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்