உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்தில் இந்தியா -மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேச்சு
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
பணி நியமன ஆணை
மத்திய அரசு பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு ரெயில்வே, வங்கிகள், சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு 243 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி 6-வது பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்தது. இதில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தற்போது வரை தேசிய அளவில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இது ஒரு லட்சம் "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக ஏற்கனவே வளர்ந்த இங்கிலாந்து போன்ற நாடுகளை தற்போது பின்னுக்கு தள்ளி உலக அளவில் 5-வது இடத்தில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் நடவடிக்கை தான்.
சுகாதாரமான தண்ணீர்
உக்ரைன் போர் முனையில் 23 ஆயிரம் மருத்துவ மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தில் நம் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் பணம் மாற்றும் முறையை கொண்டு வந்தோம். இதில் 11 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
2014-ல் மெட்ரோ ரெயில் திட்டம் 5 நகரங்களில் தான் இருந்தது. 9 ஆண்டுகளில் 27 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தி சாதனை படைத்துள்ளோம். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான சுகாதாரமான தண்ணீரை கொடுத்து வருகிறோம்.
முன்னேறிய நாடாக...
இது தவிர பசி இல்லா இந்தியா என்பதை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 80 கோடி பேருக்கு மாதந்தோறும் இலவசமாக அரிசியும், பருப்பும் வழங்கப்பட்டு வருகிறது. உள்நாட்டில் போர் உதிரி பாகங்கள் தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். சென்னை, கோவை, திருச்சியில் இருந்து ஏற்றுமதி செய்கிறோம். 2047-ம் ஆண்டில் மிகப்பெரிய வல்லமை மிக்க, ஆற்றல் மிக்க நாடாகவும், உலகத்தையே ஆளுகின்ற நாடாக இந்தியாவை உருவாக்கி வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் நம்முடைய நாடு மிகப்பெரிய முன்னேறிய நாடாக இருக்கும். இதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் ரியாஸ் உல்ஹக் வரவேற்றார். திருச்சி கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.