திண்டுக்கல்: சொத்து தகறாரில் விவசாயி கழுத்து அறுத்து படுகொலை - 2 பேர் கைது
சின்னாளபட்டி அருகே சொத்து தகறாரில் விவசாயியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அடுத்த ஜாதிக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் உத்தப்பன் (வயது 55). விவசாயியான இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், நாகபாலன் என்ற மகன் மற்றும் முருகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். நாகபாலன் கரூரில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் உத்தப்பனின் மனைவி சுப்பம்மமாளின் உறவினரான கொல்லபட்டியை சேர்ந்த மணி மாலாமுருகன் என்பவருக்கும் உத்தப்பன் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகறாறு ஏற்படுவதால் உத்தப்பன் தனது நிலத்தில் விவசாயம் செய்யாமல் தரிசாக போட்டு விட்டு விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
நேற்று மாலை ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மணி மாலாமுருகன் உத்தப்பனை வழி மறித்து தகறாரு செய்ததாகவும், பின்னார் தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் உத்தப்பனின் கழுத்தை அறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் உத்தப்பனின் கழுத்து அறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்கு பதிவு செய்து மணி மாலாமுருகன் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மணி மாலமுருகனுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது. நிலப்பிரச்சனையில் உறவினரிடையே ஏற்பட்ட தகறாரில் விவசாயி கழுத்து அறுத்து கொலை நடந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.