தேவதானப்பட்டியில்தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது
தேவதானப்பட்டியில் தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 24). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பவித்ரன். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கணேசன், தேவதானப்பட்டியில், பொம்மி நாயக்கன்பட்டி சாலையில் உள்ள தனியார் தோட்டம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பவித்ரன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அங்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கணேசனுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பவித்ரன், அவரது நண்பர்கள் மாரிமுத்து (20), வசந்த் (24), ரிஷிகேஸ்வரன் (23) மற்றும் சிலர் கணேசனை தாக்கி கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த கணேசன் தேனி அரசு கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாரிமுத்து, ரிஷிகேஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பவித்ரன், வசந்த் மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.