கடலூரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திடீர் சோதனை

கடலூர் மாநகரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திடீரென சோதனையிட்டார்.

Update: 2022-12-15 19:15 GMT

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் கடலூர் மாநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை இடங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகம் புகார் வரும் இடங்களான கடலூர் கோண்டூர் ரெயின்போ காலனி, திருப்பாதிரிப்புலியூர் திருவந்திபுரம் சாலகரை, கெடிலம் தடுப்பணை பகுதி ஆகிய இடங்களுக்கு திடீரென சென்று சோதனை நடத்தினார்.

அப்போது, அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனையிட்டார். ஆனால் அங்கு யாரும் இல்லை. இதையடுத்து அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களிடம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தார்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

பின்னர் அவர்களிடம், தெருமின் விளக்கு இல்லாத இருட்டான பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தெருமின் விளக்கு அமைக்க வேண்டும். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

குற்ற நிகழ்வு இடங்களில் ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடங்கள் குறித்து ரகசியமாக தகவல் தெரிவிக்க வேண்டும். சட்ட விரோதமான செயல்கள் சம்மந்தமாக தகவல் தெரிவிக்க உள்ளூர் காவல் நிலைய தொலைபேசி எண்கள் மற்றும் எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் போதை தடுப்பு காவல் உதவி எண்- 7418846100- யை பொதுமக்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

சோதனையின் போது, கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்