கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் 'மாணவர் மனசு பெட்டி' திட்ட நோக்கம் நிறைவேறுகிறதா?

கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் ‘மாணவர் மனசு பெட்டி’ திட்ட நோக்கம் நிறைவேறுகிறதா? என ஆய்வு நடத்தப்பட்டது.

Update: 2022-10-27 18:45 GMT

தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் 10-ம் வகுப்பு மாணவிக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், அந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதேபோல் பல்வேறு சம்பங்கள் அரங்கேறி வருகிறது.

மாணவர் மனசு பெட்டி

கடந்த 2019-ம் ஆண்டு 12 வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார். தங்கள் எதிர்கால படிப்பு பாதிக்கப்பட்டு விடுமே என்ற பயத்தில், மாணவிகள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஆசிரியர்கள், பள்ளிக்கூட நிர்வாகத்தின் மீது புகார் தெரிவிப்பதை தவிர்க்கிறார்கள். இதையொட்டி பள்ளிக்கூடங்களில் இது குறித்து ஒரு குழு அமைக்க வேண்டும் என்று கோர்ட்டு பரிந்துரைத்திருந்தது. மேலும், மாணவர்கள் தங்கள் புகாரை தெரிவிப்பதற்கு ஒரு 'மாணவர் மனசு பெட்டி' வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

அதன்படி இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொண்டு வந்தது இந்த 'மாணவர் மனசு பெட்டி'. இது மட்டுமின்றி பள்ளிகளில் உள்ள நிறை, குறைகள், கல்விப்பாதையில் மாணவர்களின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் இது ஏற்படுத்தப்பட்டது.

ஆலோசனைக்குழு

தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப் பள்ளிக்கூடங்களிலும், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் 'மாணவர் மனசு பெட்டி' வைப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ரூ.1,000 நிதி ஒதுக்கி இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் 1,433 அரசு பள்ளிகள், 282 உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் என 2219 பள்ளிக் கூடங்களிலும் தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக இந்த 'மாணவர் மனசு பெட்டி' வைக்கப்பட்டு உள்ளது. இதில் வரும் புகார்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஒரு ஆசிரியரல்லாத பணியாளர், ஒரு நிர்வாகப் பணியாளர், ஒரு வெளி உறுப்பினர் ஆகியோர் கொண்ட மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு ஒருமுறை இந்த 'மாணவர் மனசு பெட்டி' திறக்கப்பட்டு, அதில் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருக்கும் கருத்துகளை, புகார்களை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு கண்டு வருகின்றனர். சிறிய புகாரை கூட தட்டிக்கழிக்காமல் சரி செய்கிறார்கள்.

வகுப்பு தலைவன், தலைவி என்னை திட்டுகிறார். மின்விசிறி ஓடவில்லை. கழிவறை வசதி சரியில்லை. கால்பந்து மைதானம் இல்லை. விளையாட்டு வகுப்பை மற்ற ஆசிரியர்களுக்கு தரக்கூடாது. வீட்டு பாடம் அதிகம் தரக்கூடாது. அரசு பொதுத்தேர்வு வைக்கக்கூடாது போன்ற வகுப்பறை சார்ந்த புகார்கள் தான் பெருமளவில் இடம் பெறுகிறது.

காதல் கடிதம்

இது தவிர வகுப்பறையில் சில மாணவர்கள் போதை பொருட்களை எடுத்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறி வருகிறார்கள். சிலர் செல்போன் எடுத்து வருகிறார்கள். தவறான வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று குறிப்பிட்ட மாணவரின் பெயரை எழுதியும் போடுகிறார்கள். கழிவறையை சுத்தம் செய்வ தில்லை. கழிவறை கதவை திறப்பதில்லை. கதவு உடைக்கப்பட்டு இருக்கிறது போன்ற புகார்களையும் எழுதி போடுகிறார்கள். சில ஆசிரியர்கள் தன்னிடம் சரியாக பேசுவதில்லை. சக மாணவன், மாணவி சரியாக பேசுவதில்லை என்ற புகாரையும் பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் இதில் சிலர் முகம் சுழிக்க வைக்கும் பதிவையும் போடுகின்றனர். அதாவது, பெற்ற தாயை போன்று தலைமை ஆசிரியரை பார்க்கிறேன் என்று தொடங்கி, தான் காதலிக்கும் மாணவன் பற்றி ஒரு மாணவி எழுதிய காதல் கடிதமும், அந்த காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் இந்த 'மாணவர் மனசு பெட்டி'யில் போடப்பட்ட தகவலும் வெளியாகி உள்ளது.

நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?

எந்த நோக்கத்துக்காக இந்த மாணவர் மனசு பெட்டி திட்டம் கொண்டு வரப்பட்டதோ? அது நிறைவேறி இருக்கிறதா? என்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி:-

ஆசிரியர்களிடம் நேரடியாக சொல்ல முடியாத புகார்களை இந்த 'மாணவர் மனசு பெட்டி'யில் எழுதி மாணவிகள் போடுகிறார்கள். மாணவிகள் தெரிவிக்கும் குறைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை நிவர்த்தி செய்கிறோம். குறிப்பாக ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். சக மாணவிகள் பேசுவதில்லை போன்ற புகார்கள் வருகிறது. சிலர் தங்களுடைய பெயருடன் எழுதுகிறார்கள். சிலர் பெயரை குறிப்பிடாமல் பதிவு செய்கிறார்கள். அந்த புகார்களை உடனுக்குடன் சரி செய்து விடுகிறோம்.

கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செந்தாமரைச்செல்வி:-

'மாணவர் மனசு பெட்டி' திட்டம் நல்ல திட்டம். இந்த 'மாணவர் மனசு பெட்டி'யில் மாணவர்கள் தங்களிடம் நேரில் தெரிவிக்க முடியாத புகார்களை தெரிவிக்கிறார்கள். அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். கழிவறை வசதி சரியில்லை என்றார்கள். அதை சரி செய்து விட்டோம். மின்விசிறி ஓடவில்லை. ஆசிரியர்கள் திட்டுகிறார்கள் என்ற புகாரும் வரும். இது பற்றி சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் பேசி சரி செய்வோம். வாரத்திற்கு ஒரு நாள் மதியம் பிரியாணி வேண்டும் என்று மாணவர்கள் கேட்டு உள்ளார்கள். இதையும் ஏதாவது ஒரு நாளில் நிறைவேற்ற இருக்கிறோம். இது போன்ற அவர்களின் எண்ணங்களை, புகார்களை பூர்த்தி செய்து வருகிறோம்.

விருத்தாசலம் கோ.ஆதனூர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் :-

'மாணவர் மனசு பெட்டி' தற்போதுள்ள சூழ்நிலையில் தேவையான ஒன்று தான். மாணவர்கள் போடும் புகாருக்கு மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த 'மாணவர் மனசு பெட்டி'யில் உள்ள உதவி எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் புகார் செய்யும் வசதியும் உள்ளது.

இதற்கு முன்பு சில மாணவர்கள் மதிய உணவு வழங்குவதில் சில குறைபாடுகள் இருந்ததாக 'மாணவர் மனசு பெட்டி'யில் பதிவு செய்துள்ளனர். அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். நான் பொறுப்பேற்றதில் இருந்து மாணவர்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து விடுவதால் எந்த புகாரும் வருவதில்லை.

மாணவர் மனசு பெட்டி மூலம் மாணவ-மாணவிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டாலும், இந்த வளர் இளம் பருவத்தில் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பிரச்சினைகளை களைய ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகர்களை நியமிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன்:-

'மாணவர் மனசு பெட்டி'யில், சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கள் ஊரில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்கு போதுமான பஸ் வசதி இல்லை என்று புகார் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து சிதம்பரம் போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் கேட்டபோது, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று பல்வேறு புகார்களும் வந்துள்ளன. அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவர் ஜெனிஸ்:-

பலமுறை நாங்கள் பள்ளியில் உள்ள பிரச்சினைகள் குறித்து 'மாணவர் மனசு பெட்டி'யில் தெரிவித்துள்ளோம். அதற்கு பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோ.ஆதனூர் அரசு பள்ளி மாணவி அஸ்விதா

எங்கள் பள்ளிக்கூடத்தில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பாக தினந்தோறும் மாணவர் மனசு என்ற புகார் பெட்டி வைக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் தங்களுடைய புகார்களை எழுதி போடலாம். பள்ளியில் உள்ள குறைகள், ஆசிரியர்களின் செயல்பாடுகள், பாலியல் சம்பந்தமான புகார்கள் ஆகியவற்றையும் தெரிவிக்கலாம் என ஒவ்வொரு மாதமும் இதற்கென தனியாக கூட்டங்கள் நடத்தி ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த 'மாணவர் மனசு பெட்டி'யில் நாங்கள் எங்களது பெயரை குறிப்பிடாமலேயே புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதில் உள்ள உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்