கடலூரில் பறிமுதல் செய்த கஞ்சாவை பறித்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி கொலை மிரட்டல் பிடிக்க முயன்ற போது வாலிபர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு

கடலூரில் பறிமுதல் செய்த கஞ்சாவை பறித்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தவர்களை பிடிக்க முயன்ற போது வாலிபர் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

Update: 2023-04-05 18:45 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று காலை எம்.புதூர் புதுநகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த ஊர்குருவி என்கிற சூர்யபிரதாப், அவரது நண்பர் வேலு ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். இதில் சூர்யபிரதாப் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் தனது கையில் இருந்த ஒரு பாக்கெட்டை கீழே போட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த போலீசார் அதனை எடுத்து சோதனை செய்ததில், கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக சூர்ய பிரதாப்பிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

பிளேடால் கழுத்து அறுப்பு

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் சுகுமார் (வயது 23), அலெக்சாண்டர் (48) ஆகியோர் வேலுவுடன் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, போலீஸ்காரர் சத்தியமூர்த்தி ஆகியோரை கீழே தள்ளி, பறிமுதல் செய்த கஞ்சாவை பறித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களை ஆபாசமாக திட்டி அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது, சூர்யபிரதாப் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

இதில் அவருக்கு ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இருப்பினும் அவர், வேலுவுடன் அங்கிருந்து ஓடி விட்டார்.

இதற்கிடையே சுகுமார், அலெக்சாண்டர் ஆகியோர் இனிமேல் போலீசார் இந்த பக்கம் வந்தால் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ்காரர் சத்தியமூர்த்தி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சூர்ய பிரதாப் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமார், அலெக்சாண்டர் ஆகியோரை கைது செய்தனர்.

பொய் வழக்கு

இதற்கிடையே சூர்ய பிரதாப், தனது மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும், அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மதியம் புகார் மனு அளித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்