குன்னூரில் காலில் காயத்துடன் குடியிருப்பு பகுதியில் சுற்றிய சிறுத்தை- சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் காலில் காயத்துடன் சுற்றி திரியும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். சிறுத்தை காலில் காயத்துடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
குன்னூர்
குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் காலில் காயத்துடன் சுற்றி திரியும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். சிறுத்தை காலில் காயத்துடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
குடியிருப்புகள் புகுந்த சிறுத்தை
நீலகிரி மாவட்டம் ஊட்டி,கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் தீவனப் பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது.
இதனால் சில நேரங்களில் வனவிலங்கு மனித- மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் முடிந்தவரை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலில் காயம்
இந்தநிலையில் குன்னூர் அடுத்த ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் நேற்று அதிகாலையில் காலில் காயத்துடன் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். காலில் காயத்துடன் சுற்றித்திரியும் சிறுத்தையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கண்காணிப்பு கேமரா பதிவு அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம் சிறுத்தையின் காலில் காயத்துடன் சுற்றுவது போல் இருப்பதால் உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.