கோவை மாநகராட்சியில்சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதில் குளறுபடி-கூடுதல் வரி விதிப்பதாக பொதுமக்கள் புகார்
கோவையில் சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பலருக்கு கூடுதலாக சொத்து வரி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கோவை
கோவையில் சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பலருக்கு கூடுதலாக சொத்து வரி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சொத்து வரி உயர்வு
கோவை மாநகராட்சியில் மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் சொத்துவரி இனங்கள் உள்ளன.
600 சதுர அடிக்கும் குறைவான பரப்பு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. 601 முதல் 1,200சதுர அடி வரை பரப்பு கொண்ட குயிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. 1800 சதுர அடிக்கும் அதிகமாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.வணிக நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் 100 சதவீதம் உயர்த்தப்பட்டது.தொழிற்சாலை மற்றும் சுயநிதி பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் 75 சதவீதமும் காலி மனை வரி விதிப்புக்கு, ஒரு சதுர அடி நிலத்துக்கு தற்போது உள்ள அடிப்படை மதிப்பு 100 சதவீதமும் உயர்வு செய்யப்பட்டதுஉயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி கணினியில் பதிவு செய்யப்பட்டு சொத்து வரி விவரம் ஒவ்வொருவருக்கும் வீடு, வீடாக சென்று நோட்டீசு கொடுத்து உயர்த்தப்பட்ட சொத்துவரியை செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.மாநகராட்சி ஊழியர்கள் 100 வார்டுகளுக்கும் சென்று வினியோகித்து வருகிறார்கள்.
குளறுபடி
ஆனால் பல வீடுகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியில் குளறுபடிகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கோவைப்புதூர் பகுதிகளில் குடியிருப்பு வீட்டுக்கு கமர்சியல் என்று தவறுதாக பதிவு செய்யப்பட்டு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, "750 சதுரஅடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடத்துக்கு ஆண்டுதோறும் சொத்துவரி ரூ.948 செலுத்தி வந்தோம். 50 சதவீதம்தான் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் கமர்சியலாக தவறாக பதிவு செய்து தற்போது ரூ.1,896 என்று 100 சதவீத உயர்வாக வந்துள்ளது. இதுபோன்று பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவரவர் சொத்து வரி விவரங்களை கடந்த முறை செலுத்தியது, தற்போது உயர்த்தப்பட்ட விவரம் சரியாக இருக்கிறதா? என்று அந்தந்த குடியிருப்புவாசிகள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும். ஏற்கனவே சொத்து வரி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்போது தவறாகவும் கூடுதல் உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தவறாக பதிவு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது தவறாக பதிவு செய்யப்பட்டு இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.