சென்னிமலையில் விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி நேற்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு உறுப்பினர் எம்.நாகப்பன் தலைமை தாங்கினார். தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, சுமை தூக்குவோர் சங்க தலைவர் எஸ்.பொன்னுசாமி, விசைத்தறி தொழிலாளர்கள் சங்க தலைவர் எம்.செங்கோட்டையன், கட்டிட தொழிலாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முன்னதாக பி.ஆர்.எஸ்.ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் இருந்து சென்னிமலை பஸ் நிலையம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் பி.லிங்கேஸ்வரன் நன்றி கூறினார்.