சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

சென்னிமலை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடந்தது.

Update: 2022-09-29 21:37 GMT

சென்னிமலை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடந்தது.

ஆய்வுக்கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டா் கிருஷ்ணனுண்ணி, கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பசுவப்பட்டி, எக்கட்டாம்பாளையம், எல்லைகிராமம், கொடுமணல், குப்பிச்சிபாளையம், முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு, ஒட்டப்பாறை, புதுப்பாளையம் மற்றும் புஞ்சைப்பாலத்தொழுவு ஆகிய 10 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வினியோகம், வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி, சாலைவசதி, ரேஷன் கடை, சமுதாயக்கூடம், பஸ் மற்றும் நிழற்குடை வசதி, விளையாட்டு திடல் வசதி, பொதுக்கோரிக்கைகள், கோவில் திருப்பணி, மயானவசதி மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் தமிழக முதல் -அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரி செய்ய கூடிய கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் நிதியை பெற்று வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நினைவு மண்டபம்

கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருட்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடிகாத்தகுமரன் பிறந்த இல்லம் அரசின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கொடிகாத்தகுமரனுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு, உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னிமலையில் கொடிகாத்தகுமரனுக்கு அரங்கம் அமைப்பது குறித்து இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. உரிய இடம் தேர்வு செய்தவுடன் அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினிசந்திரா, கூடுதல் கலெக்டர் மதுபாலன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்