சென்னையில், பழமையான சைக்கிள் கண்காட்சி

சென்னையில் நடந்த பழமையான சைக்கிள் கண்காட்சியில் 2-ம் உலக போரில் பயன்படுத்திய சைக்கிள் இடம்பெற்றது.

Update: 2022-08-21 20:24 GMT

சென்னை தினத்தையொட்டி, நகரில் பல கண்காட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், சைக்கிள்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் சைக்கிளிங் யோகிஸ் அமைப்பு சார்பில் சென்னை தீவுத்திடலில் சைக்கிள் கண்காட்சி நடைபெற்றன.

இதனை சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொழில் அதிபர் எண்ணாரசு கருணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியில் 2-ம் உலகப்போரில் (1939-1945) விமானப்படை வீரர்கள் பயன்படுத்திய மடக்கும் வடிவிலான 'பி.ஏஸ்.ஏ.' ரக சைக்கிள், இங்கிலாந்தில் 1897-ம் ஆண்டில் பிரபலமான 'பியர்ஸ்' ரக சைக்கிள் இடம்பெற்றிருந்தன. கரடு முரடான சாலைகளை எளிதாக கடக்கும் வகையிலான இந்த ரக சைக்கிள்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த சைக்கிள்களை பார்வையிட்ட பார்வையாளர்கள் அதன் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சைக்கிள்களின் வரலாறு குறித்து அதன் பராமரிப்பாளர்களிடம் கேட்டறிந்து 'ஓல்டு இஸ் கோல்டு' என வியந்தனர்.

இந்த கண்காட்சியில் பெரியவர்கள் பயன்படுத்திய சைக்கிள்கள் மட்டுமன்றி குழந்தைகள் பயன்படுத்திய விதவிதமான 3 சக்கர சைக்கிள்களும் இடம்பெற்றிருந்தன.

இதுதவிர சைக்கிள்களில் இடம்பெற்றிருந்த டைனமோக்கள், மண்எண்ணெய் விளக்குகள், பேட்டரியில் இயங்கும் விளக்குகள், நிறமாறும் ஒளி விளக்குகள், காற்றடிக்கும் பம்புகள், கையடக்க பழுதுபார்க்கும் சாதனங்களும் கண்காட்சியை அலங்கரித்தன.

Tags:    

மேலும் செய்திகள்