முடிதிருத்தும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபடுவதை வரன்முறைப்படுத்த கோரிக்கை
முடிதிருத்தும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபடுவதை வரன்முறைப்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்துடன் இணைந்த தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க கோரிக்கை மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க கவுரவ தலைவர் சதா சிவம் கொடியேற்றினார். பொருளாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார். கவுரவ தலைவர் சண்முகம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பொதுச் செயலாளர் நாகராஜ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ஆர்.ரசல் மாநாட்டை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். சி.ஐ.டி.யு மாநில துணை பொதுச் செயலாளர் கண்ணன் பேசினார்.
மாநாட்டில் முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர் களுக்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் வழங்குவது போல் பணப் பயன்கள் உயர்த்தி வழங்க வேண்டும், கல்விக்கடன் மற்றும் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மின்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், முடி திருத்தும் தொழில் மற்றும் அழகு கலை தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபடுவதை தமிழக அரசு வரன்முறைப்படுத்த வேண்டும். முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் மூலம் இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், 1925-ம் ஆண்டு தூத்துக்குடியில் காந்திஜியை சந்தித்த பின் கதர் ஆடை அணிந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி விசுவநாததாஸ் நினைவிடத்தை தூத்துக்குடியில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானஙகள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணை செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார். மாநாட்டில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அழகுக்கலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.