ஆட்டோ டிரைவர் கொலையில் 7 பேரை பிடித்து விசாரணை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-18 19:12 GMT

நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோ டிரைவர் கொலை

நெல்லை அருகே மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென்று விஜயகுமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து வலைவீசி தேடினர்.

7 பேரிடம் விசாரணை

கடந்த ஜனவரி மாதம் மேலச்செவலில் உள்ள கோவில் வளாகத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரின் உறவினர்தான் ஆட்டோ டிரைவர் விஜயகுமார் என்பது தெரியவந்துள்ளது. எனவே பழிக்குப்பழியாக விஜயகுமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ெகாலையாளிகளைக் கைது செய்யும் வரையிலும், விஜயகுமாரின் உடலை பெற்று கொள்ள மாட்டோம் என்று கூறி, அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். மேலும் விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக உறவினர்கள் மேலச்செவலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், வருவாய் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்