அந்தியூர், கோபி, கவுந்தப்பாடி பகுதிகளில்சூறாவளிக்காற்றில் சாய்ந்த ஆயிரக்கணக்கான வாழைகள்

அந்தியூர், கோபி, கவுந்தப்பாடி பகுதிகளில் சூறாவளிக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

Update: 2023-08-31 22:28 GMT

ந்தியூர், கோபி, கவுந்தப்பாடி பகுதிகளில் சூறாவளிக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

வாழைகள் சாய்ந்தன

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடிப்பதும், மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. அதேபோல் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பகலில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. அப்போது பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சங்கராபாளையம், மந்தை ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நேந்திரம், கதலி, மொந்தன், செவ்வாழை என ஆயிரக்கணக்கான வாழைகள் அடியுடன் சாய்ந்தன.

கவுந்தப்பாடி

இதேபோல் கவுந்தப்பாடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஒரு மணி நேரம் சூறாவளிக்காற்றில் பலத்த மழை பெய்தது.

இதனால் அருகே உள்ள ஈ.ஐ.டி.விராலி மேடு, குருச்சான்வலசு, கந்தசாமிகவுண்டன்புதூர், கிருஷ்ணாபுரம், காசிலிங்ககவுண்டன்புதூர், அய்யன்வலசு, கண்ணாடிபுதூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் சூறாவளிக்காற்றில் முறிந்து அடியோடு சாய்ந்தன.

கோபி

கோபி பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்றுடன் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதனால் கோரக்காட்டூர், கடுக்காம்பாளையம், அய்யம்பாளையம், வெள்ளியங்காடு, குள்ளம்பாளையம், வெள்ளாங்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான செவ்வாழை, மொந்தன், நேந்திரன், கதலி, ரஸ்தாளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. கயிறு மூலம் கட்டப்பட்டிருந்த பாதி வாழைகளும் சாய்ந்தன.

விவசாயிகள்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, 'ஒரு வாழைக்கு சுமார் ரூ.150 முதல் ரூ.200 வரை செலவு செய்து ஒரு ஆண்டு வரை வளர்த்தோம். இந்த நிலையில் சூறாவளிக்காற்றில் சுமார் 500 வாழைகள் சேதமடைந்துள்ளன. இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சேதமடைந்துள்ள வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்