அந்தியூரில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்
அந்தியூரில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்தியூர்
கோடை காலம் தொடங்கி உள்ளதால் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பலர் குளிர்பானங்கள் வாங்கி குடிக்கிறார்கள். குளிர் நீர் வேண்டும் என்பதற்காக பலர் குளிர் சாதனங்கள் மூலம் நீரை குடித்து வருகிறார்கள். எனினும் இயற்கையான குளிர் நீரை விரும்பும் பலர் மண் பானை தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பக்தர்கள் பலர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். இதன்காரணமாக மண் பானை மற்றும் மண் சட்டியின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
இதையொட்டி அந்தியூர், புதுப்பாளையம், வேம்பத்தி ஆகிய பகுதிகளில் மண் பானை மற்றும் மண் சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மண் பானை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேவை அதிகரித்து உள்ளதால் அதிக அளவில் வியாபாரிகள் இங்கு வந்து பானைகளை வாங்கி செல்கிறார்கள். பானையின் அளவை பொறுத்து 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையும், மண் ஜாடிகள் ரூ.250-ல் இருந்து ரூ.500 வரையும், அக்னி சட்டிகள் ரூ.100 முதல் ரூ.150 வரையும் விற்பனை செய்கிறோம்,' என்றனர்.