ஆழ்வார்திருநகரி அருகே சொத்து தகராறில்ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு

ஆழ்வார்திருநகரி அருகே சொத்து தகராறில் ஒரே குடும்பத்தில் 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-08 18:45 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி அருகே சொத்து தகராறில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக உறவினர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சொத்து பிரச்சினை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள நவலட்சுமிபுரத்தை சேர்ந்தவர்கள் ஆறுமுகம், தங்கராணி. இந்த தம்பதிக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் சக்திகனி (வயது 57) தனது குடும்பத்தினருடன் அதே ஊரில் வசித்து வருகிறார்.

சக்திகனி குடும்பத்தினருக்கும், அவரது தம்பி தனசேகர் (45) குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக சக்திகனி கொடுத்த புகாரின் பேரில், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனசேகர், அவரது மனைவி சத்தியபாமா, தனசேகரின் தம்பி குணசேகரன் மனைவி பாக்கியலட்சுமி, மற்றொரு தம்பி சக்திவேல் மனைவி தங்கம் ஆகியோர் சக்திகனியின் வீட்டுக்கு சென்று சொத்து தொடர்பாக பேசினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தனசேகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், சக்திகனி, அவரது கணவர் பாஸ்கர் (71), மகன்கள் சக்தி நாராயணன் (37), சக்தி கிருஷ்ணன் (28), மகள் சத்தியபாமா (30) ஆகியோரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒருவர் கைது

தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் மற்றும் ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தனசேகரை கைது செய்தனர். தலைமறைவான தனசேகர் மனைவி சத்தியபாமா, பாக்கியலட்சுமி, தங்கம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்