5 இடங்களில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கீழ்வேளூர் பகுதியில் 5 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் 5 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரி ஊராட்சியில் இருந்து நாகை நகராட்சிக்கு வரும் குடிநீர், குருக்கத்தியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக நாகை புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் இருந்து குடிநீர் நாகை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் வசித்து வரும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் குழாய் செல்லும் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீழ்வேளூர் சந்தை தோப்பு பள்ளிவாசல், மேலத்தோப்பு அய்யனார் கோவில், அரசாணி குளம் பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்கள் ஆகிறது.
தேங்கி நிற்கிறது
இதனால் குடிநீர் சாலையில் வழிந்தோடு வீணாகிறது. கீழ்வேளூர் பேரூராட்சி 2-வது வார்டு அரசாணி குளம் வழியாக செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு கீழ்வேளூர் தபால் அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் அலுவலகம் வரும் பொதுமக்கள், ரோட்டில் நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர்.மேலும் குடிநீர் சாலையில் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினமும் இந்த இடத்தை கடந்து ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் மேற்கண்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நாகை நகராட்சியினருக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.