தூத்துக்குடி உள்ளிட்ட 4 இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 193 அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-19 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 193 அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை கைது செய்த தி.மு.க. அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கிருந்து பேரணியாக பழைய பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை மாநகராட்சி அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருடன் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில், மாநகராட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது, தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து இருந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைது

போராட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 38 பெண்கள் உள்பட 118 பேரை கைது செய்தனர்.

கோவில்பட்டி

இதேபோன்று நேற்று கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நகரச் செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி துணைப் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட நகரச் செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், கருப்பசாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர் உள்பட 30 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும், விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 43 அ.தி.மு.க.வினரும், புளியம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட 2 அ.தி.மு.க.வினரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்