2015-ம் ஆண்டில் கல்வி அதிகாரி வீட்டில் திருட்டு போன வழக்கு -தனிப்படை போலீசார் விசாரித்து விரைவில் நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

2015-ம் ஆண்டில் கல்வி அதிகாரி வீட்டில் திருட்டு போன வழக்கை தனிப்படை போலீசார் விசாரித்து விரைவில் நடவடிக்க எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-06-10 20:38 GMT


மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்தியநாதன். (வயது 62). இவர் கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2015-ம் ஆண்டில் இவர் பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து, பாதயாத்திரை சென்றார். அவரது குடும்பத்தினரும் பழனிக்கு சென்று இருந்தனர். அந்த சமயத்தில் இவர்களின் பூட்டி இருந்த வீட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே இருந்த 52 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர். பழனியில் இருந்து திரும்பி வந்த சத்தியநாதன் குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. இது குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய உத்தரவிடக்கோரி சத்தியநாதன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வக்கீல் பா.நம்பி செல்வன் ஆஜராகி, இந்த வழக்கில் தனிப்படை அமைத்து விசாரிக்கும்படி ஏற்கனவே மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனவே மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கில் வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற தேவை இல்லை என வாதாடினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தனிப்படை போலீசார் விரைவில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்