ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2½ மாதங்களில் 2,560 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும்-ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2½ மாதங்களுக்கு 2,560 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-10-11 18:45 GMT

பொள்ளாச்சி

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2½ மாதங்களுக்கு 2,560 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. புதிய ஆயக்கட்டில் பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, ஊட்டுக்கால்வாய் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் அ, ஆ என இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 44 ஆயிரத்து 380 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆழியாறு அணையில் உள்ள தற்போதைய நீர் இருப்பு, எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் சார்பில் அதிகாரிகளிடம் தண்ணீர் திறப்பு குறித்து மனு கொடுக்கப்பட்டது. இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், புதிய ஆயக்கட்டு பாசன சங்க தலைவர் அசோக்குமார், செயலாளர் செந்தில் மற்றும் பாசன சபை தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தினர் கூறியதாவது:-

கால்வாய் தூர்வாருதல்

புதிய ஆயக்கட்டு பாசனத்தில் மொத்தம் 44 ஆயிரத்து 380 ஏக்கரில் அ, ஆ மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்திற்கு 22 ஆயிரம் ஏக்கர் வீதம் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாசனம் நடைபெறுகிறது. இந்த நிலையில் 90 நாட்களுக்கு 2880 மில்லியன் கன அடி நீர் வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையில் பரம்பிக்குளம் அணையின் மதகு பழுது காரணமாக தண்ணீர் வெளியேறியதால் பாசனத்திற்கு தண்ணீரை குறைத்து கேட்கப்பட்டது. அதன்படி 2½ மாதங்களுக்கு 2560 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரிரு நாட்களில் கலந்து பேசி எவ்வளவு தண்ணீர் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என்றும், வருகிற 28-ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கிளை கால்வாய்களில் உள்ள செடி, கொடிகள் மற்றும் மண் திட்டுகளை அகற்ற வேண்டும். பிரதான கால்வாய்களை முழுமையாக சுத்தம் செய்தால் தான் கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியும். எனவே பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரசாணை பெற்றாலும் கால்வாய் தூர்வாரிய பிறகு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்