ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றவரை சிறையில் அடைத்தது சந்தேக கேள்வியை எழுப்புகிறது- போலீசார் நடவடிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி

ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்து சிறையில் அடைத்தது சந்தேக கேள்விகளை எழுப்புகிறது என போலீசாரின் நடவடிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

Update: 2023-07-11 21:12 GMT


ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்து சிறையில் அடைத்தது சந்தேக கேள்விகளை எழுப்புகிறது என போலீசாரின் நடவடிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தற்கொலை வழக்கில் கைது

சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரைச் சேர்ந்த மீனாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்னுடைய கணவர் வேலு என்ற வேலுகிருஷ்ணன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் இதய நோயாளி. நீரிழிவு நோய்க்காகவும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் கல்லல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீசார் என் கணவர் பெயரையும் சேர்த்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த என் கணவரை, இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 6-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச்சென்றனர். இதுவரை அவரது நிலை என்ன என்று தெரியவில்லை. நோய்களால் அவதிப்பட்டு வந்த அவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கணவர் மீதான வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் அளித்து கடந்த மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் மனுதாரர் கணவரை போலீசார் கைது செய்தது சட்டவிரோதம் என வாதாடினார்.

ஏற்புடையதல்ல

பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, கல்லல் பகுதியைச் சேர்ந்த நபர் இறந்தது குறித்து முதலில் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி மனுதாரரை விசாரணைக்கு மட்டுமே போலீசார் அழைத்து சென்றுள்ளனர். விரைவில் விடுவிக்கப்படுவார் என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் கணவர் இதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் காரைக்குடியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைத்தும், அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து உள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையானது, இந்த கோர்ட்டுக்கு பல்வேறு சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல.

விடுவிக்க உத்தரவு

எனவே அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுக்கும்படி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்