மகனை ஆணவ கொலை செய்த தந்தை சிறையில் அடைப்பு

ஊத்தங்கரை அருகே மகன் உள்பட 2 பேரை ஆணவ கொலை செய்த தந்தை சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் டாக்டர்கள், நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-19 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). இவரது மகன் சுபாஷ் (25). தனியார் நிறுவன ஊழியர். இவர் அனுசுயா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 பேரும் வெவ்வேறு சமுதாயம் என்பதால் சுபாசின் தந்தை தண்டபாணி ஆத்திரத்தில் இருந்தார்.

இதனிடையே கடந்த 15-ந் தேதி அதிகாலை வீட்டில் படுத்திருந்த மகன் சுபாசை தண்டபாணி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். தடுக்க சென்ற அவரது தாயார் கண்ணம்மாள் (65) என்பவரையும் வெட்டிக்கொலை செய்தார். மருமகள் அனுசுயாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறையில் அடைப்பு

இதற்கிடையே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தண்டபாணியை போலீசார் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் அழைத்து சென்றனர். அப்போது தான் பைத்தியம் என்று கூறி தண்டபாணி டாக்டர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மருத்துவ சான்றிதழ் பெற்ற போலீசார் ஊத்தங்கரை கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போதும் தான் பைத்தியம் என கூறி தண்டபாணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தண்டபாணியை சேலம் சிறையில் அடைக்க நீதிபதி அமர் ஆனந்த் உத்தரவிட்டார். பின்னர் நேற்று முன்தினம் இரவு தண்டபாணி சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்