கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-11-30 18:45 GMT

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கூலித்தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த 2018-ம் ஆண்டு 17 வயது கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது அவர், 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மாணவியிடம் பெற்றோர் கேட்ட போது அதற்கு தமிழரசன்தான் காரணம் என தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் தமிழரசனிடம் கேட்டபோது, மாணவியின் கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை எனக்கூறி தகராறு செய்தார்.

போக்சோ சட்டத்தில் கைது

இந்த நிலையில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்தது. மேலும் ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியும் கடந்த, 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி இறந்தார். மகளை கர்ப்பமாக்கி, ஏமாற்றியதாக கல்லூரி மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மரபணு பரிசோதனையில் இறந்த குழந்தை தமிழரசன் மூலம் பிறந்தது உறுதியானது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

20 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தமிழரசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ், 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்